cc

(68) தலைவர்களின் பலமும் பலவீனமும்!

Advertisment

னி நபருக்கானாலும், கட்சிகளுக்கானாலும், ஆட்சிகளுக்கானாலும், ஒரு சமூகத்துக்கானாலும் மிகவும் ஜாக்கிரதையாகக் கண்காணிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும். இதை அண்ணா இப்படிச் சொன்னார்....

"ஆளும் கட்சியின் பலமே, எதிர்க்கட்சியின் பலவீனத்தில்தான் இருக்கிறது.''

மேடைகளில் மணிக்கணக்காக, மக்களுக்கு பயனுள்ளவிதமாக பேசுவதில் வல்லவர் அண்ணா. அதேநேரத்தில் அவரால் பொடி போடுவதை தவிர்க்க முடியாது. அதை அவர் யாருக்கும் தெரி யாமல் நாசூக்காக போட்டுவிடுவார். ஏன்? எனக்குப் பொடி போடும் பழக்கமுண்டு... என மைக்கிலே சொல்லிவிட்டுப் போட்டால் யாராவது தடுப்பார் களா? இல்லை. அது ஒரு பலவீனமான செயல். தன்னால் தவிர்க்க முடியாத அச்செயலை அனை வரும் பார்க்கும்விதமாக செய்து, அதை அவர் நியாயப்படுத்த விரும்பவில்லை. நாகரிக அரசியல் செய்தவர் அண்ணா. அவரைப் பற்றி எழுதும்போது, அண்ணன் புலமைப்பித்தன் இப்படி எழுதினார். "அண்ணா மறைந்தபோது அவர் கையில் காசுமில்லை, மனதில் மாசுமில்லை'' இதுதான் பேரறிஞர் அண்ணாவின் மிகப்பெரிய பலமே.

"மைல்கேல்ராஜ்' நான் எழுதி இயக்கிய படம். அதன் நூறாவது நாள் விழாவுக்குத் தலைமை தாங்க, அன்று ஆட்சியில் இல்லாத தலைவர் கலை ஞரை அழைத்திருந் தேன். கவிஞர் சுரதா, வலம்புரி ஜான் இப் படி பல பிரபலங்களை அழைத்திருந்தேன். அனைவரும் வந்தனர்.

Advertisment

கலைஞர் பேசும் போது படத்தைப் பற்றி சிறப்பாகப் பேசினார். குறிப்பாக "இல்லாதவன் எடுத்தா சோஷலிசம். இல்லாதவன் சொல்லாமல் எடுக்கிற காலம் வந்துட்டா... சோஷலிசம் தானா நடைமுறைக்கு வந்திடும்' என நான் எழுதியிருந்த வசனத்தை சொல்லிக் காட்டி, இது எனக்கு ரொம்பப் பிடித்த வசனம் என பாராட்டி னார். அத்தோடு நிறுத் தாமல், "அண்மையில் ஈழப்போராட்டத்தை ஆதரித்து கலைஞர்கள், கவிஞர்கள், மாணவர்கள் அனைவரையும் அழைத் துக்கொண்டு ஒரு எழுச்சிப் பயணத்தை கன்னியா குமரி வரை நடத்தினார். அதனை நான் சென்னை யில் ஆரம்பித்து வைத்தேன். வெற்றிகரமாக சென்று வந்தவர்களையும் வாழ்த்த வேண்டும் என்பதற்காகவே இங்கே வந்தேன்'' என்று சொல்லிவிட்டு... "இன்றைய சூழலிலும் ஒரு நூறுநாள் படத்தை நமக்குத் தந்த தம்பி குகநாதனின் தமிழ்ப் பணியும், கலைப்பணியும் தொடரவேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்று உரையை நிறைவு செய்தார்.

நான் கலைஞரின் திரைப்பட வசனங்களால் உந்தப்பட்டவன். அதனால் தமிழ் கற்றவன். இருப் பினும் எம்.ஜி.ஆர். ரசிகன். அண்ணாவிடம் அதிக பாசமுள்ளவன். இது என் துரோணர் கலைஞருக் கும் நன்றாகவே தெரியும். இருப்பினும் எந்தக் காலத்திலும் என்னை ஒதுக்கியவர் அல்ல. இதுதான் கலைஞரின் பெரிய பலம். அனைவரை யும் அரவணைத்துப்போகும் அரிய குணம்.

cc

Advertisment

இவரின் குணத்தை இன்னொரு இடத்தில் பார்த்து ஆச்சரியப்பட்டேன். பெப்சிக்கு நான் தலைவரானதும் முதல்வர் கலைஞரை பார்க்கப் போனேன். கோபாலபுரம் வீட்டில் சகோதரர் இராம.நாராயணனும், அண்ணன் அமிர்தமும் இருந்தார்கள். இருவரும் எனக்கு பல வருட நண்பர்கள். கலைஞரிடம் வாழ்த்துப் பெற்றபின், என் பாக்கெட்டில் நான் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை எடுத்து கலைஞரிடம் கொடுத்தேன். உடனே அதைப் பிரிக்க ஆரம்பித்தார். அது என்னவென்று அங்கிருந்த யாருக்குமே தெரியாது. கலைஞர் படித்துவிட்டு "சென்னை சிட்டிக்குள்ளே ஒரே இடத்திலே ஐம்பது ஏக்கர் எங்கே இருக்கிறது'' எனக் கேட்டார். "நான் "பெச்சி' தொழிலாளர் களுக்கு குடியிருப்பு கட்டக் கேட்டேன் அண்ணே... சென்னையிலே கேட்கலே, அக்கம் பக்கத்திலே...'' என இழுத்தேன்.

"நீங்களே பார்த்துச் சொல்லுங்க'' என்றார்.

கூடுவாஞ்சேரி பக்கத்திலே ஒரு இடத்தை தேடி கண்டுபிடிச்சு, உடனே கலைஞரிடம் போய் சொன்னேன்.

"அது வேற ஏதோ குடியிருப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நான் உங்களுக்கு வேற இடம் காட்டச் சொல்றேன்'' என்றார் முதல்வர்.

அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஐ.ஏ.எஸ். ஆபீசர் காமராஜ் மற்றும் அது சம்பந்தப்பட்டவர்கள் நாலு கார்களில் போய் பல இடங்களைப் பார்த்தோம். என் காரில் என் மேனேஜர் சாமிநாதன் மட்டுமே எங்களோடு வந்தார். இது பெப்சிக்காக மட்டும் என்பதனால் வேறு யாருக்கும் தெரியாது. பார்த்த இடங்களில் பையனூர் எனக்குப் பிடித்திருந்தது. கலைஞரிடம் சொன்னேன். அரசு அதிகாரிகள், அது மெயினான இடம், அதிக விலை என்றெல்லாம் முதல்வ ரிடம் சொன்னார்கள். அவர் என் முகத்தைப் பார்த்தார். சில வினாடிகள்தான்... "அதையே குகநாதனுக்கு குடுத்திடுங்க'' என்றார்.

அதைவிட வேகமான ஒரு முடிவுக்கு வந்தேன். இனிமேல் இவர் வாழும் வரை இவரோடுதான் பயணிப்பதென்று. "பெப்சி' ஒரு டிரேடு யூனியன். அதனால் ஒரு டிரஸ்ட் தேவைப் பட்டது. கே.பாலச்சந்தர், நான், இராம.நாராயணன், இருபத்து மூன்று சங்க பிரதிநிதிகளோடு பெப்சி டிரஸ்ட் உருவாக்கினேன். பின்னர் பழைய கூட்டுறவு சங்க செயல்பாடுகள் சரியில்லாததால் அதனை கலைத்துவிட்டு புதிய கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி, கலைஞர் சொன்னபடி அதன் தலைவ ராகவும் ஆனேன். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவல கம் போய் நிலப் பத்திரங்கள் பெற வேண்டிய நேரம் வந்ததும் கலைஞரை சந்திக்கப் போனேன். முக்கிய மான விஷயம் ஏதோ பேசப்போகிறேன் என்பதைப் புரிந்துகொண்ட முதல்வர் கலைஞர், மற்றவர்களை வேலைகளை முடித்து வெளியே அனுப்பினார்.

"பையனூர், சென்னையிலிருந்து 49 கிலோ மீட்டர்...'' என நான் ஆரம்பித்ததும், "குகா... என் சந்தேகமும் அதுதான். தொழிலாளர்கள் குடி யிருப்பு அவ்வளவு தூரத்தில் இருந்தால், படப் பிடிப்பு நடக்கும் இடத்துக்கு தினமும் எப்படி வந்து போகமுடியும்?'' எனக் கேட்டார்.

"முதலிலேயே அதற்கு ஒரு திட்டம் என்னிடம் இருந்தது. அதைச் சொல்லவேண்டிய நேரம் இதுதான்'' என்றேன்.

"என்னது...?'' என ஆவலோடு கேட்டார்.

"பையனூரில் ஒரு திரைப்பட நகரை உருவாக்க வேண்டும். கோடம்பாக்கம் தற்போது கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. தொடர்ந்து சினிமா நகராக கோடம்பாக்கம் தொடர முடியாத நிலை. அதனால் தமிழ்த் திரைப்பட நகராக பைய னூரை உருவாக்கலாம். அங்கே தொழிலாளர்களே நடத்தும் ஒரு படப்பிடிப்பு நிலையத்தை உருவாக்கலாம். அதற்கும் இன்னும் ஒரு பதினைந்து ஏக்கர் தாருங்கள். தயாரிப்பாளர் கள், நடிகர் சங்கம், சின்னத்திரை ஆகியோருக்கும் வீடு கட்டி வாழ நிலங்கள் கொடுங்கள்'' எனச் சொன்னேன்.

கலைஞர் தீவிரமாக சிந்தித்தார். "ஹைதராபாத் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் ஒரு திரைப்பட நகரை உருவாக்கியுள்ளனர். உங்கள் நண்பர் தாசரி நாராயணராவ்தான் அதன் தலைவர்'' என்று சொல்லி, அது சம்பந்தமான பத்திரங்கள், படங்கள், சட்ட திட்டங்கள் அனைத்தையும் அவரிடம் கொடுத்தேன்.

ccc

"படித்துவிட்டுச் சொல்கிறேன்'' எனச் சொன்னார்.

அதற்குள் நான் அகில இந்திய திரைப்பட தொழிலாளர் மாமன்றத்தின் செயலாளராக வெற்றிபெற்றேன். அகில இந்திய மாமன்றத்தின் ஒன்பதாவது ஆண்டுவிழாவை சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டேன். நந்தம்பாக்கம் டிரேடு சென்டரில் மூன்று நாட்கள் சங்கங்களின் எதிர்கால திட்டங்கள் வகுக்கும் மாநாடு. இதை காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை நடத்தத் திட்டமிட்டோம். மாலை ஐந்து மணியிலிருந்து இரவு பத்து மணி வரை நேரு உள்விளையாட் டரங்கில் அகில இந்திய நடிக, நடிகையர், இசை யமைப்பாளர்கள், பாடகர் கள், நடனக் கலைஞர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள் பங் கேற்கும் கலை நிகழ்ச்சிகளை மூன்று நாட்கள் நடத்த திட்டமிட்டோம். முதல் நாளன்று கலைஞர் தலைமை. அன்றே அவரைப் பாராட்டி ஒரு பட்டமும் அளிக்கத் திட்டமிட் டோம். இதற்கிடையில் கலைஞர் என்னை அழைத்து பையனூர் திரைப்பட நகர் உருவாக அனுமதி தந்தார். தொழிலாளர்கள் நடத்தும் படப்பிடிப்பு தளத்துக்கு பதினைந்து ஏக்கரும் தந்தார். அதன் பின் தயாரிப்பாளர்கள், நடிகர் சங்கம், சின்னத்திரைக்கும் நிலம் கொடுக்கும் திட்டத்தையும் செயல்படுத்தினார். நான் காஞ்சி கலெக்டர் அலுவலகம் சென்று பெப்சிக்கான பல அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட ஐம்பது ஏக்கரும், படப்பிடிப்புத் தளங்கள் கட்டி, ஸ்டுடியோ நடத்த பெப்சிக்கு பதினைந்து ஏக்கர்களை யும், கூட்டுறவு சங்க சீஃப் புரமோட் டராக நான் பத்திரங்களை பெற்றுக் கொண்டேன். அதன்பின் இராம. நாராயணன், ராதாரவி, விடுதலை மூவரிடமும் தெரிவித்தேன். நான் தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினராகவும் இருந்தேன்.

(திரை விரியும்)